போலி தங்கக்காசு கொடுத்து மோசடி.. "போலீஸை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்"

0 5981
போலி தங்கக்காசு கொடுத்து மோசடி.. "போலீஸை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்"

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே போலி தங்கக்காசுகளைக் கொடுத்து பண மோசடியில் ஈடுபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், வழக்கறிஞர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்பவர் தீபாவளிக்காக தங்கக்காசு ஏலச்சீட்டு நடத்தி வந்தார். தீபாவளி நெருங்கியதால் குறைந்த விலையில் தங்க காசுகள் வாங்குவதற்காக, சேலத்திலுள்ள இடைத்தரகர்களிடம் போனில் பேசியுள்ளார். சிறிது நேரத்தில் பெரியசாமி என்பவன் போனில் அழைத்து கிராமுக்கு 300 ரூபாய் குறைவாக தங்கக்காசு தருகிறேன் எனக் கூறி ஓமலூர் வருமாறு கூறியுள்ளான்.

அதனை நம்பி 15 லட்ச ரூபாய் பணத்தோடு ஓமலூர் வந்த பழனியிடம் பெரியசாமி, அவனது மகன் ஜகன், மருமகன் பரணீதரன் ஆகியோர் தங்கக்காசுகளைக் கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுள்ளனர்.

பழனி அந்த தங்கக்காசுகளை சோதித்துக் கொண்டிருக்கும்போதே அங்கு வந்த 2 பேர், தங்களை போலீசார் எனக் கூறி, பணத்தை காவல் நிலையம் வந்து வாங்கிச் செல்லுமாறு பறித்துக்கொண்டு வேகமாகச் செல்ல முயன்றுள்ளனர்.

அவர்களோடு சேர்ந்து பெரியசாமி கும்பலும் தப்பிச் சென்றதும் சந்தேகமடைந்த பழனி, அவர்களை விரட்டிப் பிடிக்க முயன்றுள்ளார். அதில் உதவி ஆய்வாளர் எனக் கூறியவனை மட்டும் பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் பழனி.

விசாரணையில் அந்த நபர் கொண்டலாம்பட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் என்பது தெரியவந்தது. அவன் மூலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் விஜயகுமார் என்பவனையும் பெரியசாமி கும்பலையும் போலீசார் கைது செய்தனர்.

சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணனும் அவனது நண்பனான வழக்கறிஞர் விஜயகுமாரும் சேர்ந்து போலி தங்கக்காசுகளை கொடுத்து மோசடி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 6 பேர் மீதும் மோசடி, பணம் பறிப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, போலி தங்கக்காசுகளைக் கொடுத்து மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள கொண்டலாம்பட்டி காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரவணனை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments